10வது ஆண்டாக நடைபெறும் சைமா விருது வழங்கும் விழா நேற்றும் இன்றும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. நேற்றைய தினம் தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர்கள். நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, அரவிந்த் சாமி, மிர்ச்சி சிவா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல தமிழ் திரை நட்சத்திரங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்
சிறந்த திரைப்படமாக பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ தேர்வானது. இந்த விருதை நடிகர் ஆர்யா பெற்று கொண்டார் அதேபோல், சிறந்த இயக்குநருக்கான விருதை விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வென்றார். சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது ‘மண்டேலா’ படத்தின் மடோன் அஸ்வினிக்கு வழங்கப்பட்டது.

மாநாடு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினை நடிகர் சிம்புவும், சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை நடிகர் எஸ்.ஜே சூர்யாவும் பெற்றுக்கொண்டனர். டாக்டர் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு சிறந்த முன்னனி கதாபாத்திரத்தில் நடித்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சர்பாட்டா பரம்பறை படத்தில் நடித்ததற்காக நடிகர் ஆர்யாவுக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
தலைவி படத்தில் நாயகியாக நடித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு சிறந்த நடிகைக்கான விருதும், இதே படத்தில் நடித்த நடிகர் அரவிந்த் சாமிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடிகர் யோகி பாபுவுக்கு அவுட்ஸ்டான்டிங் பெர்ஃபார்மன்ஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ரசிகர்கள் சாய்சில் சிறந்த நடிகையாக “திட்டம் இரண்டு” படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார். சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை “டாக்டர்” படத்திற்காக நடிகை பிரியங்கா மோகன் பெற்றார்.
“கர்ணன்” படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயனன் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார்.சிறந்த பாடகர் விருதினை கபிலன் பெற்றார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா “நெற்றிக்கண்” படத்தில் இடம்பெற்ற ‘இதுவும் கடந்து போகும்’ பாடலுக்காக பெற்றார்.