ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வந்தப்படம் “வலிமை”. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

“வலிமை” படத்தின் பூஜைக்கு பின் எந்தொரு அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடாதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினார். அதுமட்டுமல்லாது பிரதமர் மோடி முதல் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி வரை “வலிமை அப்டேட்” கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
ஒரு கட்டத்தில், ரசிகர்கள் சிலர் கடவுள் முருகனிடமே “வலிமை அப்டேட்” கேட்டு போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர். இப்படி போகும் இடமெல்லாம் “வலிமை அப்டேட்” ரசிகர்களுக்கு, படக்குழுவினர் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

புத்தாண்டு கொண்டாட்டமாக சமீபத்தில் வெளியான “வலிமை” படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், பைக் ஸ்டண்ட், சேசிங் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது ஒமைக்கரான் பரவல் காரணமாக பல மாநில அரசுகள் ஊரடங்கு, திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வலிமை படக்குழுவினரின் இந்த முடிவால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், வலிமை படத்தில் நடித்தவர்களுக்கான சம்பளம் குறித்தான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் படி அஜித்துக்கு ரூ.70 கோடி, நடிகர் கார்த்திகேயா ரூ.8 கோடி, நடிகை ஹூமா குரோஷி ரூ.7-8 கோடி, நடிகர் யோகிபாபு ரூ.50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.