இன்று விஜய் ஆண்டனி ஒரு மிகப்பெரிய நடிகராக மாறி இருந்தாலும், ஆரம்ப காலத்தில் இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளராக தான் இருந்தார். சுக்ரன் படத்தின் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இசை அமைப்பாளராக அறிமுகமானார் இவர். முதல் படத்திலேயே, யார் இந்த படத்திற்கு இசை அமைத்தது என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு அனைத்து பாடல்களுக்கு மிக அற்புதமாக மெட்டமைத்திருப்பார் விஜய் ஆண்டனி. அதிலும் குறிப்பாக சாத்திக்கடி போத்திக்கடி என்ற பாடல் இன்று வரை பிரபலம். அதில் தளபதி விஜய் கூட நடனம் ஆடி இருப்பார்.

தற்போது இவர் வெளிப்படங்களுக்கு பெரிதாக இசை அமைக்கவில்லை என்றாலும், தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பெரும்பாலும் இசை அமைக்கிறார். இவர் இசையில் வெளியான நாக்கு மூக்க பாடல் அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிச்சைக்காரன் படத்தில் இவர் இசை அமைத்த “நூறு சாமிகள் இருந்தாலும்” என்ற பாடல் காலத்தால் அழிக்க முடியாத ஒரு பாடலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படம் மிக சிறப்பாக திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷனிற்காக விஜய் ஆண்டனி அளித்த பேட்டியின் போது, நீங்கள் இதுவரை எந்த பாடலையாவது காப்பி அடித்து இசை அமைத்துள்ளீர்களா என்று பேட்டி எடுப்பவர் கேட்க, அதற்கு மிகவும் சுவாரஸ்யமான பதிலை விஜய் ஆண்டனி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், காதலில் விழுந்தேன் படத்திற்கு நான் தான் இசை அமைத்தேன். அந்த படத்தின் பல பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தில் வரும் “உனக்கென நான், எனக்கென நீ” என்ற பாடலுக்கு நான் இசை அமைக்கவில்லை. அந்த குறிப்பிட்ட பாடலிற்காக நான் கிட்டத்தட்ட ஒரு 15 ட்யூன்களை இசையமைத்து இயக்குனரிடம் கொடுத்தேன். ஆனால் அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை.

இயக்குனர் தன் மனதில் ஒரு பாடலை வைத்துக்கொண்டு, அதே மாதிரி தான் இந்த ட்யூன் இருக்க வேண்டும் என்று கூறினார். உடனே நான், மன்னிக்கவேண்டும் சார், அந்த ட்யூனிற்கான காப்புரிமை என்னிடம் இல்லை. நான் அதை அப்படியே வாசித்தால் தவறாகிவிடும் என்றேன். உடனே அவர், சரி அப்படி என்றால் நான் அதை வாசித்து, அந்த பாடல் மட்டும் என்னுடைய இசை என்று போட்டுக்கொள்கிறேன் என்றார் இயக்குனர். நானும் சரி என்றேன்.
ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டானது. அந்த பாடல் ஹை பிச்சி டோன் என்பதால் அதை பாடுவதற்கு அப்போது சரியான பாடகர் கிடைக்கவில்லை. அதனால் அதை நானே பாட வேண்டிய ஒரு சூழல் உருவானது. ஆகையால் அதை நான் பாடினேன். அதனால் அந்த பாடலின் பாடகர் என்ற இடத்தில் என் பெயர் வருகிறது. அதற்கு இசை அமைத்தவர் என்று இடத்தில் இன்றுவரை பி.வி பிரசாத் என்ற இயக்குனரின் பெயர் தான் வருகிறது. ஆகையால் நான் இதுவரை எந்த பாடலையும் காப்பி அடிக்கவில்லை என்பதை தைரியமாக கூறுவேன் என்று கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.