இன்று நடிகர் சிவகார்த்திகேயன் என்று சொன்னால் தமிழகத்தில் அவரை அறியாத ஆட்களே இருக்க முடியாது என்று கூறலாம். அவருக்கென்று தற்போது மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய ஆரம்பகால வாழ்க்கை என்பது இப்படி தான் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை. பல வருட கடின உழைப்பிற்கு பிறகு தான் அவரால் சினிமா துறையில் காலடி எடுத்து வைக்கவே முடிந்தது.

சிவா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று அதில் ஜெயித்தார். அதன் பிறகு விஜய் டீவியிலேயே பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தொகுப்பாளராக இருக்கும் சமயத்திலேயே இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாக துவங்கியது.
இவர் திரையுலகில் அறிமுகமான படம் மெரினா. இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இவரது முதல் படமே பெரிதாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து 3, மனம் கொத்திப் பறவை போன்ற பல்வேறு படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்துள்ள சிவா இன்று உச்சநட்சத்திரமாக மிளிர்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், உங்கள் முதல் பட சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு, 10 ஆயிரம் ரூபாய் தான் நான் மெரினா படத்திற்காக வாங்கிய சம்பளம் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். பத்தாயிரம் என்பது ஒரு நாளைக்கா என்று கேட்டதற்கு, இல்லை மொத்த படத்திற்குமே எனக்கு அவ்வளவு தான் சம்பளம். நான் அதில் 14 நாட்கள் நடித்திருந்தேன் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் அதற்க்கு சரியான பதில் கூறாமல் 3 கோடிக்கு மேல் என்று மட்டும் கூறியுள்ளார். தற்போது அவருடைய டாக்டர் படம் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு அடுத்து அயலான் படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது நடிப்பில் தற்போது தயாராகிக்கொண்டிருக்கும் படம் டூன். அந்த படத்தில் பஞ்ச் சொக்கலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.