தளபதி விஜய் என்றால் இன்று தமிழகத்தில் அனைவருமே அறிவர். அந்த அளவிற்கு மிக உச்ச நட்சத்திரமாக மிளிர்கிறார் தளபதி விஜய். தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், இயக்குனர் எஸ்.ஏ.சி யின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பகாலத்தில் இவரை வைத்து எஸ்.ஏ.சி சில படங்களை இயக்கி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, எஸ்.ஏ.சிக்கும் தளபதி விஜய்க்கும் இடையே பிரச்சனை உண்டானது குறித்த சில செய்திகள் வெளிவந்தது நாம் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சி, விஜய்யின் சாதி குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இன்றுவரை தளபதி விஜயின் சாதி சான்றிதழில் தமிழன் என்றுதான் அவரின் சாதி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல், தளபதி ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டது. அதே போல அதே மேடையில், எஸ்.ஏ.சி, தான் தன்னுடைய மகனுக்கு ஏன் விஜய் என்று பெயர் சூட்டினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே, நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் கூட கதா நாயகனுக்கு விஜய் என்று தான் பெயர் சூட்டி இருந்தேன்.

அந்த அளவிற்கு அந்த பெயரின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அது மட்டும் அல்லாமல் இந்தி திரையுலகத்தில் சலீம் ஜாவித் என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எழுதிய கதை அனைத்திலும் நாயகனின் பெயர் விஜய் தான். அமிதாப் பச்சன் முதல் அனைத்து ஹீரோக்களும் அவருடைய கதைகளில் விஜய் என்ற பெயரிலேயே நடித்தனர்.
காரணம், அந்த பெயருக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. வில்லுக்கு விஜயன் என்று அந்த காலத்தில் கூறுவார்கள். விஜய் என்றால் வெற்றி. அதனால் தான் என் மகனுக்கு நான் விஜய் என்று பெயர் வைத்தேன் என்று கூறி உள்ளார் இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி