மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்துள்ளது. அத்துடன் நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது. வரலாறு காணாத தொய்வால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து சசிகலா அதிமுக தொண்டர்கள் கலங்கி விட வேண்டாம். மீண்டும் ஒன்றிணைவோம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை சசிகலா போயஸ்கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசினார்.
அவர் ஆலோசனை நடத்த இருந்த போயஸ்கார்டன் வீட்டிற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்கள் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என குறிப்பிட்டிருந்தனர். அத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைவோம் எனக் குறிப்பிடப்படுள்ளது. ஒன்று சேர்வோம். வென்று காட்டுவோம். சின்னம்மா தலைமையில் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.