டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நின்று கொண்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டு, அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த சூழலில், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலையும், நிவாரணத்தையும் அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
அவரை தொடர்ந்து, மேற்குவங்க ரயில்வேத்துறை இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணத்தை அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ10 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
மேலும், தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். தற்பொழுது, இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளைப் பற்றிய தகவல்களை குடும்பங்கள் தொடர்பு கொள்ள உதவும் ஹெல்ப்லைன் எண்களின் பட்டியலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.